Skip to main content

ஆளப்பிறந்தவன் 

[ எனக்கும், கடலுக்கும் நடந்த உரையாடல் இது ]

நெடுநாளாய் வீழ்ந்து கிடந்த 
நீர்ப்பிணம் ஒன்றின் 
நீண்ட மணல் வெளியில்,
நெஞ்சம் சுமந்த 
நினைவுகளை எல்லாம்,
நிழற்படமாய் 
மனதுக்குள் சுவாசித்துக் 
கொண்டிருந்தேன் !

மேகத்தில் துளியில்லை,
வானம் முழங்கவில்லை,
வெள்ளிக் கம்பிகள் 
திரிக்கப்படவில்லை,
குளிர் காற்றும் என்னைக் 
குடிக்கவில்லை, ஆனாலும் 
நனைகிறேன் நான் !

திரும்பிப் பார்த்தேன்,
திகைத்தேன் !
என் உயரத்திற்கு 
நீர் எழும்பி,
என்னை நனைத்துச் 
சிரித்தபடி கேட்டது,
'என்னை யார் ?' - என்று  
'அகிலம் ஆளப்பிறந்தவன் 
நான்' எனக்கூறி,
என் அடி தொழுது 
நிற்கும் நீ யார் ?
எனக் கேட்டேன் !

என்னிடம் 
விடை எதிர்பார்த்திருந்த 
நீர்ப்பிணம், என் 
எதிர் வினாவினால் 
எரிச்சலுற்றது !
நீர் வரிசைகளால் 
என்னை அடித்தது !

இரைச்சலுடன் உயரே எழுந்து 
என்மேல் மோதி வீழ்ந்தது !
வீழ்ச்சியைத் தன் பயத்தால் மறைத்து,
"நான் ஓர் நீர்ப்புரட்சி;
என் பெயர் கடல் " என்றது !

என் பார்வை 
அதன் மேல் கூர்மையானதும் 
தொடர்ந்து கூறியது,
"ஆழத்தை 
அடிமைப்படுத்தியவன் 
நான் !"

கோடான கோடி 
உயிர்களைச் 
சுமக்கிறவன் நான் !
என் பசிக்கு 
பல உயிர்களை 
பலி கொண்டவன் நான் !
வானவில்லையும் 
வளைத்துப் போடும் 
வல்லமை பெற்றவன் நான் !
அதிசயங்களின் 
ஆச்சர்யம் நான் !
என்னுள் அள்ளிச் செல்ல 
செல்வங்கள் ஏராளம் !
என்னைப் புரிந்து கொண்டால் 
நான் ஓர் உளவு !
புரிய மறுத்தால் 
அவர்கள் என் கனவு !
எனச் சொல்லிக் கொண்டே 
நீரை வாரி இறைத்தது 
மீண்டும் ஓர்  ஏலனச்சிரிப்போடு !
இப்போது கேட்டது 
மீண்டும் 'நான் யார்' என்று 
ஆணவத்தில் ஆர்ப்பரித்துத் 
துள்ளும் கடலைக் கண்டு 
சொல்லத் துவங்கினேன் 
நான் யாரென்று !

படைத்தவன் பார்த்து ரசிக்க 
பல உயிர்களை இரட்சிக்கப் 
பிறந்தவன் நான் !
என்னை எனக்குள் சென்று 
நான் யார் என்று, என்னால் 
தெரிந்து கொள்ளும் 
ஆற்றல் படைத்தவன் நான் !
ஆழத்தை அடிமைப்படுதியவனே !
உன் ஆழம் அளக்க 
அளவுகோல் கண்டவன் நான் !
உன் பசிக்கு, பல 
உயிர்களை படைப்பவன் நான் !
உன்னுள் இறங்கி 
உன்னைக் கொள்ளையடிக்கும் 
திறன் பெற்றவன் நான் !

இரகசியங்களை மொத்தமாக 
வைத்துள்ள உனக்குள் 
இறங்கும் நான், எந்த 
இரகசியமும் இல்லாதவன்,
படைத்த பரம்பொருள் 
அனுபவிக்கத் தெரிந்தவன் நான்,
பார்க்கும் இடமெல்லாம், என் 
முத்திரைப் பதிக்கத் 
தெரிந்தவன் நான்,
இருந்த இடத்தில் 
இருந்து நகர 
முயற்சி மட்டும் 
செய்பவன் நீ !

எங்கும் 
எளிதில் நகரத் 
தெரிந்தவன் நான் !
"என் பெயர் மனிதன்"
எனச் சொல்லி 
முடிக்கும் வேளையில்,
ஆர்ப்பாட்டம் தவிர்த்து,
ஆணவம் தவிர்த்து,
அமைதியாய் என் 
பாதம் கழுவிச் சென்றது 
கடல் !




 



Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !