Skip to main content

கருவறைக் கனவுகள்


அம்மா !
அம்மா !
உன் கருவிலிருந்து
உள்ளூரக் கதறும்
என் குரல்,
உன் காதில்
விழவில்லையோ !

அம்மா !
உன் தொப்புள் கொடி
முடிச்சின் உறுதியில்,

இவ்வுலகை
முதன் முதலாக
சுவாசிக்கும்
வெற்றிக் களிப்பில்
கை கால்களை அசைத்து,

காற்றினை அடிக்க
ஆசை !

அம்மா !
உன் வயிற்றினுள்
வளரும் போது, உன்னை
எத்தனை முறை
எட்டி உதைத்து
முட்டித் தள்ளியிருப்பேன் !

அத்தனைக்கும் சேர்த்து
மொத்தமாக உன் மடியில்
அழுது  தீர்க்க
ஆசை !

அம்மா !
என்னைத்  தொட்டுப்
பார்க்கும், உன்
விரல்களை
விடாப்பிடியாகப்
பிடித்துக் கொள்ள
ஆசை !

என்
உடல் வளர்க்க
உன் மார்பில்
உதிரம் உறிஞ்ச
ஆசை !

இப்படி
எத்தனையோ
ஆசைகள், அம்மா !

உன் கருவில்
நான் வளரும் போதே !
ஆனால் ...


மகனை எதிர்பார்த்த உனக்கு
மகளாய் நான்
பிறந்ததால்
மனித வாழ்வை
எனக்கு
மறுத்துவிட்டாயா  ?

 அம்மா !

கருவில் எனக்கு
உரு கொடுத்து,
உயிர் கொடுத்து,
உள்ளம் கொடுத்து,
உணர்வுகள் கொடுத்து,

மறுபடியும் இந்த
மண்ணிற்கே
உரமாய் கொடுத்து விட்டாயே !

அம்மா !
பத்து மாதம்
பாடுகள் பல பட்டு
பெற்றெடுத்த என்னை
பரந்த பூமிக்குள்,

புதைத்த
காரணம்தான் என்ன ?
என் தாயே !

தாயே !
உன் கருவறையை
என் கல்லறையாக்காமல்,

என் தொட்டிலை
எனக்கு பாடையாக்கும் முன்
இப் பூமித்தாயின்
மடியில் கிடத்தியதற்கு
நன்றி தாயே !


Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !